விழுப்புரம்:தனியார் ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதையடுத்து காவல்துறையினர் ஆசிரம நிர்வாகி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட ஒன்பது நபர்களை கைது செய்துள்ளனர். இந்த ஆசிரமம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பழனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பல்வேறு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி. பழனி இன்று மாலை ஆனாங்கூர் - பாணாப்பட்டு சாலையில் உள்ள கோடாங்கி பாளைத்தில் இயங்கி வரும் கிருபாலையா அறக்கட்டளை அன்பு முதியோர் இல்லத்தினையும், அதனை தொடர்ந்து அசோகபுரியில் உள்ள வேலா மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு உள்ள முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள், மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவரிடமும் விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாவட்டம் முழுவதிலும் உள்ள ஆசிரமங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இதன் ஒரு பகுதியாக இன்று இரண்டு ஆசிரமங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
வேறு ஆசிரமங்களில் இது போன்ற முறைகேடுகள் நடைபெற்று விடக்கூடாது என்ற நோக்கத்தில் அனைத்து ஆசிரமங்களிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், மாதம் ஒரு முறை அரசு அதிகாரிகள் மாவட்டத்திலுள்ள அனைத்து ஆசிரமத்திலும் ஆய்வு மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் புகாருக்குள்ளான தனியார் ஆசிரமத்தில் இருந்த 141 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் 86 நபர்கள் நல்ல நிலைமையில் உள்ளதால் அவர்களது உறவினர்களிடம் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மீதமுள்ள நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆதரவற்றோர் இல்லத்தில் நடந்த கொடுமைகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு தேவை - அன்புமணி