விழுப்புரம் அருகேயுள்ள காணை பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவபிரகாஷ்-சுபாஷினி தம்பதி. இவர்களுக்கு ஹரிஷ்(12), அன்புச்செல்வன்(7) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். பொறியாளரான சிவபிரகாஷ் லண்டனில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சுபாஷினி அங்குள்ள பள்ளியில் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இவர்கள் தங்களது இரண்டு பிள்ளைகளையும் லண்டனில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்து வந்தனர். அண்மையில் ஊர் திரும்பியிருந்த சுபாஷினி, தனது மூத்த மகனை விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியிலும், இளைய மகன் அன்புச்செல்வனை நன்னாடு கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் சேர்த்தார். லண்டனில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்த அன்புச்செல்வன், தற்போது நன்னாடு அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள், சக மாணவர்களின் உதவியோடு தமிழ் வழிக்கல்வியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதுகுறித்து மாணவர் அன்புச்செல்வனின் தாய் சுபாஷினி கூறும்போது.,
"எனது தந்தை அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்தார். நானும், எனது சகோதரரும், தமிழ் வழிக்கல்வியில் பயின்று வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளோம். எனது கணவரும், தமிழ் வழிக்கல்வியில் பயின்றவர். சிறந்த அனுபவக் கல்வியையும், தனித்திறன்களையும் அரசுப் பள்ளிகளில் தான் பெறமுடியும்.
சமூக அழுத்தத்தின் காரணமாகவே பெரும்பாலான பெற்றோர்கள் ஏழ்மையான நிலையிலும் தங்களது பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்த்து வருகின்றனர். இதனால் அந்த மாணவர் மீது கடன்சுமை ஏற்படுகிறது. இதுபோன்ற பெற்றோர்களின் எதிர்பார்ப்பு வெளிநாட்டு நிறுவனத்தில் தங்களது பிள்ளைக்கு வேலை, மாத சம்பளம் மட்டும்தான். இவர்களது ஆசையை தனியார் பள்ளி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆகையால் அனைவரும் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன்வரவேண்டும் என்றார்.
அரசுப் பள்ளியில் படிக்கும் லண்டன் மாணவர்