விழுப்புரம் அடுத்த ஜானகிபுரத்தில் அடுத்தடுத்து இரண்டு டாஸ்மாக் கடை ஒரேஇடத்தில் இயங்கி வருகிறது. இந்த இரண்டு கடைகளிலும் மற்ற கடைகளை விட அதிக அளவு மது பாட்டில்கள் விற்பனை செய்வது வழக்கமாக நடைபெறுகிறது.
மேலும் இந்த இரண்டு கடைகளிலும் மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ. 5 முதல் ரூ. 10 வரை கூடுதலாக விற்பனை செய்து வருவதாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் நேற்று (அக்.29) மாலை இரண்டு டாஸ்மாக் கடையில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த சோதனை முடிவில், இரண்டு கடைகளிலும் 31 ஆயிரத்து 610 ரூபாய் கணக்கில் வராத பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் கடைகளை ஒட்டியவாறு இருந்த அறைகளில் சட்டவிரோதமாக மதுபாட்டிலுடன், ரூ. 6 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.