விழுப்புரம்:உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் மெக்கானிக் தமிழ் வழி பாடப்பிரிவில் இனி மாணவர் சேர்க்கை கிடையாது என அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் ஒரு சுற்றறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. குறிப்பிட்ட தமிழ் பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் அண்ணா உறுப்பு கல்லூரி விழாவில் நான் கலந்து கொள்ள சென்ற போது, கல்லூரி முதல்வரும் நிருபர்களும் என்னிடம் கூறினார்கள்.
ஆனால் இது சம்பந்தமாக உயர்கல்வித்துறை செயலாளருக்கோ எனக்கோ எந்தவித தகவலும் முறையாக தெரிவிக்கப்படவில்லை. தன்னிச்சையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. உடனடியாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரிடம் இது தொடர்பாக பேசினேன். பின்னர் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
தமிழ் வழியில் படிக்க மாணவர்கள் இல்லை என்பதால் அதை மூடுவது முக்கியமல்ல. திமுக ஆட்சிக் காலத்தில் தான் பொறியியல் படிப்பில் தமிழ் வழியில் பாடப்பிரிவுகள் கொண்டு வர சட்டம் இயற்றப்பட்டது என மேற்கோள் காட்டினேன். நான் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் தமிழ் வழி கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டார்.
தமிழ் மீதும், தமிழ் வளர்ச்சி மீதும் அக்கறை கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், கருணாநிதி காலத்தில் சமூக அறிவியல் பாடத்திட்டத்தை தமிழ் வழி பாடப்பிரிவாக கொண்டு வந்தவர் கருணாநிதி. ஒன்றும் அறியாத அண்ணாமலை ஏதோ அரசியல் காரணங்களுக்காக பேச வேண்டும் என்று, வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். அவருக்கு தமிழைப் பற்றி எதுவும் தெரியாது. தமிழரது வரலாறும் தெரியாது. கன்னடத்தில் இருந்து இங்கு வந்து அரசியல் செய்ய வந்திருக்கிறார். அவருக்கு தமிழைப் பற்றி என்ன தெரிந்துவிடப் போகிறது?
அவர்களைப் போல் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டத்தை மக்களிடம் திணிப்பதற்கு முயல்கிறேனா? அண்ணாமலைக்கு ஒன்றுமே தெரியாது. எது என்னவென்று தெரியாமலே அரசியல் காரணங்களுக்காக அவர் தொடர்ந்து இதுபோன்று பேசி வருகிறார்.
தமிழ் மீதும் தமிழ் வளர்ச்சி மீதும் அக்கறை கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் சமூக அறிவியல் பாடத்திட்டத்தை தமிழ் வழி பாடப்பிரிவாக கொண்டு வந்தவர் கருணாநிதி. கல்வி தொடர்பான பிரச்னைகளை களைய வேண்டும் என்பதற்காகவே சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டுமென்று சட்டமாக இயற்றி அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, இதுபோன்ற பிரச்னைகள் களையப்படும். மேலும் பொறியியல் கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கும் ஒருசில இடங்களில் நிதி பற்றாக்குறையால் அப்பணிகள் மெதுவாக நடைபெறுகிறது. படிப்படியாக கட்டமைப்பு உயர்த்தப்பட்டு, மாணவரின் கல்வித் திறனை உயர்த்துவதற்கு இந்த அரசு தொடர்ந்து பாடுபடும்" என கூறினார்.