விழுப்புரம்:மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், “மரக்காணம் எக்கியார் குப்பம் மற்றும் சித்தாமூர் ஆகிய இரு இடங்களில் கள்ளச்சாராயம் குடித்து 16 பேர் (தற்போதைய நிலவரப்படி 22 பேர் உயிரிழப்பு) உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது அரசின் தோல்வியாக பார்க்கிறேன். கள்ளச்சாராயத்தினை தடுக்க தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கள்ளச்சாராயம் காவல் துறையினருக்கும், அரசியல் கட்சியினருக்கும் மற்றும் விஏஓவுக்கும் தெரியாமல் ஒரு சொட்டு கூட விற்பனை செய்ய முடியாது.
பல ஆண்டுகளாக இந்த இரு பகுதிகளிலும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு முழுக் காரணம் தமிழ்நாடு அரசுதான். அரசின் முழுத் தோல்வியாக இதைப் பார்க்கிறேன். கள்ளச்சாராயத்தினைத் தடுக்கத்தான் டாஸ்மாக் திறக்கப்பட்டது. ஆனால், இரண்டிற்குமே தற்போது வித்தியாசம் இல்லை.
கடந்த ஓராண்டில் டாஸ்மாக் சாராயத்தினால் தமிழ்நாட்டில் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு அரசு உடனடியாக படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் மது இல்லாமல் வாழ முடியாது என்ற சூழலை அதிமுகவும், திமுகவும் உருவாக்கி உள்ளது.
கடந்த ஆண்டில் 9ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் விற்பனை உயர்ந்துள்ளதாக அமைச்சர் கூறுகிறார். டாஸ்மாக்கில் விலை ஏற்றம் செய்யபட்டதால் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கூலித் தொழிலாளிகள் கள்ளச்சாராயத்திற்கு மாறி உள்ளனர். மதுவை திணிக்கிற அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது.