விழுப்புரம்:கலைஞர் அறிவாலயத்தில் வருகிற அக்.1ஆம் தேதி நடைபெற உள்ள கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநில ஆதிதிராவிடர் நல அணி, சிறுபான்மையினர் அணி இணைந்து விழுப்புரம் மத்திய மண்டலம் சார்பில் திண்டுக்கல் லியோனி இன் பட்டிமன்றம் நடத்தவுள்ளனர்.
பட்டிமன்றம் குறித்த ஆலோசனைகளைப் பெறுவதற்காக ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளர்கள் வி.பி.ராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் புஷ்பராஜ் உள்ளிட்ட விழுப்புரம் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.
அப்போது, அமைச்சர் பொன்முடி அமர்ந்தவாறும் வந்தவர்களை நிற்கவைத்தும் பேசியதாக புகைப்படம் ஒன்று நேற்றைய தினம் வெளியானது. இதனைக் கண்ட நெட்டிசன்கள், “இருக்கை காலியாக இருந்தும் அவர்களை அமர வைக்காதது ஏன்? 'மாமன்னன்' பட பாணியிலான அடக்கமுறையா இது” என கேள்வி எழுப்பினர்.