அதிமுக முன்னாள் எம்.பி.யும், விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளருமாகவும் இருந்தவர், லட்சுமணன். கடந்த 2012ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சி.வி. சண்முகத்தை அமைச்சர் பதவிலிருந்து நீக்கிய அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, அவர் வகித்த விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியை லட்சுமணனுக்கு வழங்கினார். அதுமட்டுமின்றி, அதற்குப் பின்னர் லட்சுமணன் மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
முதலமைச்சர் பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இணைப்புக்குப் பிறகு, சி.வி. சண்முகம் மாவட்டச் செயலாளராகவும், லட்சுமணன் அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு மாவட்ட அளவில் ஓரங்கப்பட்ட லட்சுமணன், கடலூரைப் போல விழுப்புரம் மாவட்டத்தையும் பிரித்து தன்னை மாவட்டச் செயலாளராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் அண்மையில் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் வாய்ப்பு கேட்டதாக சொல்லப்படுகின்றது.
இதற்கு கட்சித் தலைமை ஒப்புக்கொள்ளாததால் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார், லட்சுமணன். இந்நிலையில் லட்சுமணன் இன்று (ஆகஸ்ட் 18) காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். இவருடன் சேர்ந்து 14 ஒன்றிய அளவிலான நிர்வாகிகளும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்வின்போது திமுக பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விழுப்புரம் திமுக மாவட்டச் செயலாளர் பொன்முடி உடன் இருந்தனர்.