விழுப்புரம்:தமிழ்நாடு காவல் துறை சிறப்பு டிஜிபி தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பெண் காவல் கண்காணிப்பாளர், ஏப்ரல் மாதம் புகார் அளித்தார். இதையடுத்து, சிறப்பு டிஜிபி, அவருக்கு உதவிய செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மேலும், இது தொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர். தொடர்ந்து இந்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கடந்த மாதம் 9ஆம் தேதி குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.
முன்னிலையாகாத முன்னாள் சிறப்பு டிஜிபி
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு நேற்று (செப். 27) விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மட்டும் முன்னிலையானார். முன்னாள் சிறப்பு டிஜிபி முன்னிலையாகவில்லை. அவரது தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள், தங்கள் தரப்பில் வாதாட கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்.
நீதிபதி தடாலடி
இதனைக் கேட்ட நீதிபதி கோபிநாதன், “முன்னாள் காவல் கண்காணிப்பாளர் தரப்பு, அரசுத் தரப்பு என இரு தரப்பும் வாதாடிவிட்ட நிலையில் நீங்கள் மட்டும் கால அவகாசம் கேட்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயலாகும். கால அவகாசம் வழங்க முடியாது” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, “அன்றைய நாள் கண்டிப்பாக முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் வாதாட வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கை சென்னையிலே விசாரிக்கலாம்- உச்ச நீதிமன்றம் உத்தரவு