விழுப்புரம்: டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.1,000/- உதவித்தொகை பெற்றிட விண்ணப்பித்த முதலாமாண்டு கல்லூரி மாணவியர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன், இன்று (10.01.2023) துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் இது குறித்து தெரிவிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர், அரசுப் பள்ளியில் பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவியர்களின் கல்வி இடைநிற்றலை தவிர்த்திடும் வகையில் உயர் கல்வி பயிலும் மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000/- உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார். இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் 2ஆம் ஆண்டு, 3ஆம் ஆண்டு மற்றும் 4ஆம் ஆண்டு உயர் கல்வி பயிலும் 1.33 லட்சம் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், முதற்கட்டமாக ஆகஸ்ட் மாதம் முதல் 56 கல்லூரியைச் சார்ந்த 2, 3 மற்றும் 4ஆம் ஆண்டுகளில் படிக்கும் 4,174 மாணவிகளுக்கு ரூ.2,08,70,000/- வழங்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டத்தில், 01.10.2022 அன்றிலிருந்து விழுப்புரம் மாவட்டத்தில் 19 கல்லூரிகளைச் சார்ந்த முதலாம் ஆண்டு மாணவிகள் மற்றும் முதற்கட்டத்தில் விண்ணப்பிக்கத் தவறிய 3,222 மாணவிகள் தற்பொழுது விண்ணப்பித்துள்ளனர்.