தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த கார்.. நல்வாய்ப்பாக உயிர் தப்பிய குடும்பம்! - கார் விபத்து

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் கார் தீ பிடித்து எரிந்த நிலையில் காரில் சென்ற குழந்தை உள்பட நான்கு பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

லாரி மீது கார் மோதிய விபத்து
லாரி மீது கார் மோதிய விபத்து

By

Published : Mar 12, 2023, 5:54 PM IST

லாரி மீது கார் மோதிய விபத்து

விழுப்புரம்:கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த நிக்கில் மற்றும் அவரது மனைவி காவியா, அவர்களுடைய குழந்தைகள் சிவகங்கா சிவா, அதிமிகா ஆகிய நான்கு பேரும் கேரளாவிலிருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை நிக்கில் ஓட்டிச் சென்றார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சேக் உசேன்பேட்டை பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி கம்பிலோடு ஏற்றிக் கொண்டு சென்ற டாரஸ் கனரக லாரி மீது கார் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதனால், கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. விபத்தால் ஏற்பட்ட தீ வேகமாகப் பரவியதை அறிந்த ஓட்டுநர் நிக்கல் காரினை தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

இதனால் காரில் பயணம் செய்த அனைவரும் காரை விட்டு உடனடியாக வெளியேறி சிறிய தீக்காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்த பொதுமக்கள் உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தண்ணீரைப் பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாகத் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து போக்குவரத்து காவல் துறையினர், வாகனங்களை மாற்றுப் பாதையில் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எடைக்கல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் முன்னால் சென்ற லாரி மீது மோதி தீ பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கு: தப்பிக்க முயன்றவரை சுட்டுப் பிடித்த போலீசார்!

ABOUT THE AUTHOR

...view details