தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகாரம்.. இரு பிரிவினரிடமும் விசாரணை தொடக்கம்

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகாரத்தில் இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணை தொடங்கி உள்ளது.

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் தீண்டாமை விவகாரம் - இரு பிரிவினர் மீதும் விசாரணை தொடக்கம்!
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் தீண்டாமை விவகாரம் - இரு பிரிவினர் மீதும் விசாரணை தொடக்கம்!

By

Published : Jun 10, 2023, 1:31 PM IST

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் தீண்டாமை விவகாரம் - இரு பிரிவினர் மீதும் விசாரணை தொடக்கம்!

விழுப்புரம்: கோலியனூர் அருகே மேல்பாதி என்னும் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து செயல்பட்டு வருகிறது. அதன் பின்னர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை சரிவர பராமரிக்காததாகவும், எனவே அதை அப்பகுதி கிராம மக்கள் பராமரித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைபெற்றது. அந்த நேரத்தில் கோயிலுக்குள் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் கோயிலுக்குள் நுழைய மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், அவர்களில் 10 பேர் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பட்டியலின சமூகத்தினர் பலர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கும் மேலாக இரு சமூகத்தினருக்கும் இடையே போராட்டமும், மோதல்களும் தொடர்ந்தன. மேலும், பட்டியலின மக்கள் கோயிலுக்குள் நுழைய எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் மற்றொரு சமூகத்தினர் பெண்கள், குழந்தைகள் என 300க்கும் மேற்பட்டவர்கள் திரௌபதி அம்மன் கோயிலுக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த சூழல் தொடரவே, இரு தரப்பினரையும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, கடந்த 7ஆம் தேதி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் கோயிலுக்கு சீல் வைத்து 80 நபர்களுக்கு நேரில் சம்மன் வழங்கினார்.

தற்போது அந்த பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதால், சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அந்த கிராமத்திற்கு 145 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 10) இரு தரப்பினரும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவின் பேரில், இரு தரப்பினரும் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர். இந்த விவகாரத்தில் பட்டியலின மக்கள் தரப்பினர் 38 பேர் மீதும், மாற்று தரப்பினர் 42 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் டி.எஸ்.பி சுரேஷ் தாசில்தார் வேல்முருகன் மற்றும் வளவனூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:விழுப்புரத்தில் 'தீண்டாமை' விவகாரம்.. மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைப்பு!

ABOUT THE AUTHOR

...view details