விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கள்ளிப்பாடி கிராமத்தில், மணலூர்பேட்டை உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த சரக்கு லாரியை சோதனை செய்ததில் லாரியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்கள் 40 பெட்டிகளில் இருந்தது தெரிய வந்தது. 600 கிலோ எடையுள்ள அந்த போதைப் பொருட்களின் மதிப்பு நான்கு லட்சம் ரூபாய் ஆகும்.
600 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல் விசாரணை நடத்தியதில் பெங்களூருவிலிருந்து பாண்டிக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் லாரியில், அதன் உரிமையாளருக்குத் தெரியாமல் ஓட்டுனர் முத்துகிருஷ்ணன், ஏஜெண்ட் சிவக்குமார் ஆகிய இருவரும் போதைப் பொருட்களை கடத்தியது தெரிய வந்தது.
மணலூர்பேட்டை அருகே உள்ள மளிகைக் கடை ஒன்றிற்கு போதைப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்ட இருவருடன், மளிகைக் கடை உரிமையாளர் இராதாகிருஷ்ணனையும் கைது செய்த காவல்துறையினர், போதைப் பொருட்களோடு லாரியையும் பறிமுதல் செய்தனர்.