விழுப்புரம் மாவட்டம், புதுப்பாளையம் கிராமத்தில் கடந்த வாரம் மோகன்ராஜ் என்னும் நபர் உள்பட ஐந்து பேர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், மோகன்ராஜ் கந்துவட்டிக்கு கடன் வாங்கி ரம்மி, லாட்டரியில் பணத்தை இழந்தது தெரியவந்தது.
தனிப்படை அமைப்பு
இதையடுத்து, மாவட்டம் முழுவதும் காவல்துறைக் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு 3 நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுப்பட்ட 20க்கும் மேற்பட்டோரை தனிப்படைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின், கைது செய்யப்பட்ட அருண் என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், சென்னை, தாம்பரம் பகுதியைச் சேர்ந்த முருகநாதன் என்பவர் முதலாளியாக செயல்பட்டு, தமிழ்நாடு முழுவதும் ஏஜென்டுகளை நியமனம் செய்து லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
3 நம்பர் லாட்டரி முதலாளி கைது
அதன் அடிப்படையில், தனிப்படைக் காவல் துறையினர் சென்னை விரைந்து சென்று முதலாளி முருகநாதன் (50), மேலாளர் சையத்ஒலி (47) ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து நான்கு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், லேப்டாப், ஐந்து செல்போன்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தினர்.