விழுப்புரம்: மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 14 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் 55 க்கும் மேற்பட்டோர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் 48 பேர் பொது சிகிச்சைக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனை, புதுவை அரசு மருத்துவமனை, மரக்காணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
விஷச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் சாராயம் தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
மேலும் விஷச்சாராயம் விற்பனை தொடர்பாக மரக்காணம் காவல் நிலையத்தில் அவசர வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, குற்றச்சம்பவத்தில் தொடர்புடைய சாராய வியாபாரிகளான அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, குணசீலன் ஆகியோர் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சாராய வியாபாரிகளுக்கு மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளிகளான, புதுவை முத்தியால்பேட்டை ராஜா என்கிற பர்கத்துல்லா, வில்லியனூர் ஏழுமலை, சென்னை திருவேற்காடு இளைய நம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.