தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனைத் தடுக்க அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் பணிபுரிந்துவந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 20 பேருக்கு தற்போது கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிப்புக்குள்ளானவர்கள் வசிக்கும் ஆவுடையார்பட்டு, பஞ்சமாதேவி, கண்டமானடி, திருப்பாச்சனூர், ராம்பாக்கம், கயத்தாறு, குத்தாம்பூண்டி, தும்பூர், பூண்டி, கஸ்பகாரனை, அசோகபுரி ஆகிய 11 கிராமங்களை தனிமைப்படுத்த மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்தப் பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து கோயம்பேடு சந்தையிலிருந்து வருபவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்றுவருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கனவே 51 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக 20 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் சென்னை கோயம்பேடு சந்தையிலிருந்து 200-க்கும் மேற்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்டத்துக்குத் திரும்பியுள்ளதால் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகின்றனர். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் இடர் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க...தமிழ்நாட்டின் வூஹான் ஆன கோயம்பேடு; தவறு எங்கே நடந்தது?