விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜன.7) மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் எந்த இடத்திலும் ஆம்புலன்ஸ் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக்கொண்டனர். அதாவது, பணியை முடித்து ஓய்வில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் இரவு பணி ஊழியர்கள் மட்டுமே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டமானது, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விழுப்புரம், திண்டிவனம் என நான்கு இடங்களில் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில், “கரோனா தொற்று ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, அதிகப்படியான தொழிலாளர்களை பழிவாங்க வேண்டுமென தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்க நினைக்கும் GVK-EMRI நிர்வாகத்தை கண்டித்தனர்.
மேலும், கரூர் வெள்ளியணை ஆம்புலன்ஸ் ரேடியேட்டர் ஊழல் விசாரணையை முறையாக நடத்த வேண்டும், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு பணி வழங்க வேண்டும், சிறப்பு பணிக்காக நாளொன்றுக்கு அரசு வழங்கிய 150 ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதையும் படிங்க:கூத்தப்பாடி பஞ்சாயத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்