1,000 லிட்டர் சாரய ஊறல் அழிப்பு - 4 பேருக்கு போலீஸார் வலை
விழுப்புரம்: அரகண்டநல்லூர் மலைப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1,000 லிட்டர் சாரய ஊறல்களை காவல் துறையினர் கண்டறிந்து அழித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லாந்தல் கிராம மலைப் பகுதியில் சாரய ஊறல்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) எஸ். ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி ஜெயக்குமாரின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு சிறப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோ தலைமையிலான காவல் துறையினர் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த மலைப்பகுதி புதர் ஒன்றில் 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஐந்து பேரல்களில் 1,000 லிட்டர் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவற்றை அழித்த காவல் துறையினர், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளான வசந்த கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த அய்யனார், வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா, பழனி, சரத் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.