வேலூர்:சென்னையைச் சேர்ந்த பெண், சென்னையில் இருந்து மின்சார ரயில் மூலம் நவம்பர் 22ஆம் தேதி அன்று அரக்கோணம் சென்றுள்ளார். பின் அங்கிருந்து கன்டோன்மென்ட் நோக்கி செல்லும் மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில், ரயில் காட்பாடி நிலையத்திற்குச் சென்றுள்ளது.
அப்போது ரயிலில் பெண் தனியாக இருப்பதைக் கண்ட இளைஞர் ஒருவர் அந்த பெட்டியில் ஏறியுள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் செல்போன் கேட்டு மிரட்டியுள்ளார். பலமுறை கேட்டும் பெண் செல்போனை கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த இளைஞர், பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி செல்போனை பறித்துள்ளார்.
அப்போது அந்த பெண் கூச்சலிடவே, பெண் அணிந்திருந்த துப்பட்டாவைப் பிடித்து இழுத்து, அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளார். இதனைக் கண்ட பொதுமக்கள் பெண்ணை மீட்டு சேனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காட்பாடி ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ரயில் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை வைத்து, காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அதில், ரயிலில் பயணம் செய்த அந்த இளைஞர் குடியாத்தம் கீழ்ஆலத்தூர் சின்னநாகல் கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் ( 24) எனத் தெரியவந்தது. இதையடுத்து ஹேமராஜை நேற்று (நவ. 23) காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் மகளை கொன்ற தாய் - நெல்லை பகீர் சம்பவம்!