வேலூர்:காட்பாடி அடுத்த ஓடை பிள்ளையார் கோயில் அருகே வேலூரில் இருந்து காட்பாடி, சித்தூர் செல்லும் சாலையில் நேற்று நள்ளிரவு மூன்று இளைஞர்கள் யமஹா பைக்கை நிறுத்திவிட்டு, அதன் மீது பிறந்தநாள் கேக்கை வைத்து, பட்டாக்கத்தியை கொண்டு வெட்டி, பிறந்தநாள் கொண்டாடினர். இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது
இதனை அடுத்து காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பரமக்குடியைச் சேர்ந்த பூவரசன் என்பதும்; காட்பாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வேலை செய்து வருவதும் இரண்டு வருடங்களுக்கு முன்பு எடுத்த படத்தை தற்போது அவருடைய நண்பர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டதும் தெரிய வந்துள்ளது.
இதேபோல் கடந்த சில வருடங்களாக தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதும், லைக் கிடைக்க ஆசைப்பட்டு, இளைஞர்கள் சிலர் பட்டாக்கத்தியை வைத்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் வாடிக்கையாகி வருகிறது.
இதையும் படிங்க: போக்குவரத்து காவலருடன் மல்லுகட்டிய வாகன ஓட்டி.... நடந்தது என்ன?
கடந்தாண்டு சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளும் விதிவிலக்கல்ல என்று கூறலாம். சில மாதங்களுக்கு முன் திருநெல்வேலியில் பாஜகவின் விளையாட்டுப் பிரிவு மாவட்ட தலைவரான உடையார், தலையில் கிரீடம், கழுத்தில் மாலை அணிவித்து பெரிய வாளால் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் கடந்தாண்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 17 வயது சிறுவன் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதால் அச்சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் துரித நடவடிக்கைகள் எடுத்து இது போன்ற சம்பவங்களைத் தடுத்து வந்தாலும், இளைஞர்கள் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்க்க இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது தொடர் கதையாகி வருகிறது.
இதையும் படிங்க:கஞ்சா விற்றால் குண்டர் சட்டம்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!