வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளானேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கதிர்வேல் வயது (17).
நேற்று இரவு திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழை நீர் தெருக்களில் வெள்ளமாக தேங்கி நின்றது. மின்சார கம்பிகளும் பல பகுதிகளில் அறுந்து விழுந்தன. மழை நின்ற பின்பும் அறுந்து விழுந்த மின் கம்பிகளை மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யவில்லை.
இந்நிலையில், கதிர்வேல் என்ற சிறுவன்தன் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் உள்ள குழாயில் வழக்கம் போல் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார். அங்கு தேங்கிருந்த மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனைக் கவனிக்காத கதிர்வேல் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் உடலைப் பார்த்து அவரது பெற்றோர் அழுத காட்சி அப்பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. இது குறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.