வறண்ட ஆற்றை வற்றா நதியாக மாற்றிய கிராம மக்கள்..! வேலூர்:தண்ணீர் மாசுபடுவதைத் தவிர்க்கவும், நீர்நிலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை உலக ஆறுகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், வேலூர் மாவட்டத்தின் முக்கியமான ஆறாக விளங்கும் பாலாறு, தென்னிந்திய விவசாயத்தின் தாய் ஆறு என போற்றப்படுகிறது.
செய்யாறு, கவுண்டன்ய மகாநதி, மலட்டாறு, நாக நதி, அகரம் ஆறு, பொன்னை ஆறு மற்றும் கல்லாறு ஆகியவை பாலாறின் முதன்மையான துணை ஆறுகள் ஆகும். சுமார் 17,900 சதுர கிலோ மீட்டர் தூரம் பாலாற்றின் நீர் பிடிப்பு பகுதிகளாக உள்ளது. ஒரு காலத்தில் பாலாற்றில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில் இன்று சில காரணங்களால் பருவ மழைக் காலங்களில் மட்டுமே நீர்வரத்து காணப்படுகிறது.
ஆனால், நாக நதி, அகரம் ஆறு ஆகிய ஆறுகளில், முன்னாள் இஸ்ரோ ஆராய்ச்சியாளர் சுப்பிரமணியன் வழிகாட்டுதலின் படி வாழும் கலை அமைப்பினர் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் ஒன்றிணைந்து நீர்வரத்து பாதைகளில் 500க்கும் மேற்பட்ட நீர் செறிவூட்டும் கிணறுகளை அமைத்தனர்.
அதன் காரணமாகப் பருவ மழைக் காலங்களில் மழை நீர் பூமிக்குள் உறிஞ்சப்பட்டு தற்போது நாக நதி, அகரம் ஆறு ஆகிய இரண்டு நதிகளிலும் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து அந்த பகுதிகளில் நீர்வரத்து காணப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வேளாண்மையும் செழித்து வருகிறது.
உலக ஆறுகள் தினத்தையொட்டி, வாழும் கலை அமைப்பினர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டப் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அகரம் ஆற்றில் பூஜை செய்து மலர் தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து முன்னாள் இஸ்ரோ ஆராய்ச்சியாளர் சுப்பிரமணியன் கூறியபோது, "இந்தியா முழுவதுமாக நிலத்தடி நீர் எங்கெங்கு உள்ளது அதை எப்படி உயர்த்தலாம் என்ற திட்டத்தை உருவாக்கி, நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் ஜனசக்தி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்று எந்தெந்த மாநிலங்களின் நீர் நிலைகளுக்கான உதவிகள் தேவைப்படுகின்றதோ அங்கு சென்று செயற்கைக்கோளின் வரைபடத்தை வைத்து வாட்டர் ஆர்வி சிஸ்டம் மூலமாக நிலத்தடி நீரை உயர்த்திக் கொண்டிருக்கிறோம்.
அதன் ஒரு பகுதியாக, வேலூரில் தண்ணீர் இல்லாமல் இருந்த நாக நதி என்ற சின்ன ஆற்றையும், அகரம் ஆற்றையும் வாழும் கலை அமைப்பு என்ற தொண்டு நிறுவனம் மூலமாகவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் செயல்படும் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் மூலமாகவும் எங்களது திட்டத்தைச் செயல்படுத்தி 500க்கும் மேற்பட்ட நீர் செறிவூட்டும் கிணறுகளை அமைத்தோம்.
இதன் பலனாக, இரண்டு வருடமாக வறண்ட ஆறாக இருந்த நாக நதி மற்றும் அகரம் ஆறு தற்போது நீர் வளம் அதிகமாகி வற்றாத ஆறுகளாக உருவாகியுள்ளது. இதனைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மங்கி பாத் நிகழ்ச்சியில் வெகுவாக பாராட்டினார். மேலும், இதன் அடுத்தகட்டமாக இதுபோன்ற திட்டத்தை நாங்கள் தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் ஆறுகளிலும் செயல்படுத்த உள்ளோம். ஆகவே இதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை" என்று கூறினார்.
இதையும் படிங்க:சீமானை சண்டைக்கு கூப்பிடும் வீரலட்சுமி..! தயார் நிலையில் மைதானம்..!