தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டாலினின் ஆணவத்திற்கு சவுக்கடி தரவேண்டும் - கே.பி. முனுசாமி - Stalin

வேலூர்: ஸ்டாலினின் ஆணவத்திற்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் என அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

K.P.Munuswamy

By

Published : Jul 23, 2019, 11:32 PM IST

Updated : Jul 24, 2019, 8:52 AM IST

வேலூர் மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 28 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் ஜூலை 24ஆம் தேதி அதிமுக மக்களவைத் தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், கே.சி. வீரமணி, சி.வி. சண்முகம், சி. விஜய பாஸ்கர், சரோஜா, வளர்மதி உள்பட 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர் .

மேலும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட அதிமுகவின் மூத்தத் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் வேலூர் தேர்தல் களத்தில் பணியாற்றுவது குறித்து நிர்வாகிகளுக்கு அமைச்சர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

ஸ்டாலினின் ஆணவத்திற்கு சவுக்கடி தரவேண்டும் - கே.பி. முனுசமி

கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பேசுகையில், "நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் தோல்வியை சந்தித்தாலும் கூட ஒரு வகையில் வெற்றிபெற்றுள்ளோம். அதாவது உண்மையான அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோர் பக்கம்தான் இருக்கின்றனர் என்பதை இந்தத் தேர்தல் மூலம் நிரூபித்துள்ளோம்.

எனவே நடைபெறவுள்ள வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுகதான் வெற்றிபெறும். திமுக தலைவர் ஸ்டாலின் ஆணவத்துடன் பேசிவருகிறார். சமீபத்தில் கூட அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வரவேண்டும் என்று பேசியுள்ளார். அவருக்கு எவ்வளவு ஆணவம், திமிர் இருந்தால் இவ்வாறு பேசியிருப்பார். அவரது ஆணவத்திற்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் நீங்கள் தேர்தல் பணியாற்ற வேண்டும்" என்று பேசினார்.

தொடர்ந்து அவைத் தலைவர் மதுசூதனன் பேசுகையில், துரைமுருகன் ஒரு காலத்தில் மாற்றுச்சட்டை கூட இல்லாமலிருந்தார் என்றார். எம்ஜிஆர்தான் அவருக்குச் சட்டை, காலணி வாங்கிக் கொடுத்ததை சுட்டிக்காட்டிய மதுசூதனன், ஆனால் அந்தத் தலைவரையே சட்டப்பேரவையில் துரைமுருகன் காறித் துப்பியதாக வேதனைபட தெரிவித்தார்.

Last Updated : Jul 24, 2019, 8:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details