வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரவலாக சட்டவிரோதமாக காட்டன் சூதாட்டம் நடைபெற்று வருகின்றது. இதனால், அடித்தட்டு மக்கள், கூலித்தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், ஏழை மக்கள் பசி பட்டினியால் வாடி வருகின்றனர். இதனைத் தடுக்கக்கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பெண்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில், சட்டவிரோதமாக நடைபெறும் காட்டன் சூதாட்டத்தைத் தடுக்கக்கோரி வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த வுமன் இந்தியா மூமெண்ட் அமைப்பைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள், இன்று கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.