வேலூரில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் பணிபுரியும் 24 வயது பெண்ணும், 20 வயது இளைஞனும் காதலித்துவந்துள்ளனர். கடந்த 18ஆம் தேதியன்று இவர்கள் இருவரும் பணியை முடித்து விட்டு, சாரதி மாளிகை எதிரே உள்ள கோட்டை பூங்காவிற்கு இரவு 9.30 மணியளவில் சென்றனர். அப்போது, இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனிமையில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், கோட்டைக்குள் போதையில் சுற்றித்திரிந்த மூன்று பேர் கொண்ட கும்பல், காதலனை கத்தி முனையில் மிரட்டி, அப்பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவு செய்து பெண்ணிடமிருந்த செல்போன், தங்க நகை ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் இச்சம்பவம் குறித்து புகாரளித்துள்ளார். இதன் பின்னர், பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைக்காக அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வந்தனர். இந்த விசாரணையில், வேலூர் கஸ்பா வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவர் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. அஜித்தை கைது செய்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈட்டுபட்டதை ஒப்புக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அவரது கூட்டாளிகளான, அடா மணிகண்டன் (41), கோழி சக்திவேல் (19) ஆகியோரை கைது செய்தனர்.
இந்நிலையில், மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் இளம்பெண்ணிடம் பறித்த செல்போன், தங்க நகை உள்ளிட்டவற்றை ஆட்டோ ஓட்டுநர் கொய்யா மாரியிடம் (32) கொடுத்தது தெரியவந்தது. கொய்யா மாரியையும் கைது செய்த காவல் துறையினர் அவரிடமிருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் குற்றம் செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில், வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.