வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரது மகள் லாவண்யா(20). இவருக்கும், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த சக்திவேல் என்பவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இவர்களுக்கு கலைரஞ்சனி என்ற இரண்டு வயதில் குழந்தை இருந்தது.
தம்பதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஓராண்டுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதில், லாவண்யா தனது குழந்தையுடன் வேலூரிலுள்ள தாய்வீட்டில் வசித்து, கட்டட வேலைக்கு சென்று வந்துள்ளார்.
அப்போது கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார்(25) என்பவருடன் லாவண்யாவுக்கு காதல் ஏற்பட, தனக்கு திருமணமானதையும், குழைந்தை இருந்ததையும் மறைத்து இரண்டாவதாக அவரை திருமணம் செய்துகொண்டார். இதனிடையே, குழந்தையை காணமுடியாத ஏக்கத்தில் தவித்த லாவண்யா, தனது அக்கா மகள் தாய் வீட்டில் இருப்பதாகவும், அந்த குழந்தையை அழைத்து வரக்கூறி பிரவீன்குமாரிடன் கேட்டுகொண்டார்.
பின்னர், அவரும் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வர, லாவண்யா குழந்தையைக் கண்ட மகிழ்ச்சியில் இருந்தார். தொடர்ந்து, குழந்தை யாருடையது என்று கேட்டு பிரவீன்குமார் தகராறில் ஈடுபட்டார். இதனால், லாவண்யாவும் தனக்கு ஏற்கனவே திருமணமானதையும், கலைரஞ்சனி தன்னுடைய குழந்தைதான் என்பதையும் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, கடந்த புதன்கிழமையன்று (மே 20) மதுபோதையில் இருந்த பிரவீன்குமார், லாவண்யாவிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி வீசினார். இதில், தலையில் பலமாக அடிபட்டு குழந்தை மயங்கியது. பின்னர், குழந்தையை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து, குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை சக்திவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குழந்தையை தூக்கி எறிந்து கொன்ற பிரவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வீட்டின் முன் தூங்கிக் கொண்டிருந்த லாரி ஓட்டுநர் கொலை: பின்னணி என்ன?