வேலூர்: பேரணாம்பட்டு திரு.வி.க.நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜா. இவருடைய மகள் 19 வயதான ராஜேஸ்வரியும், பேரணாம்பட்டு அடுத்த ரங்கம் பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மோகன் என்பவருடைய 20 வயது மகனான ஸ்ரீதரும் கடந்த 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.
இருவரும் கடந்த மூன்று மாதத்திற்கு முன் பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின் இருவரும் ஸ்ரீதர் வீட்டார் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதனிடையே ராஜேஸ்வரி - ஸ்ரீதர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக இருவருக்கும் அவ்வப்போது குடும்ப சண்டைகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (டிச.4) இரவு ஸ்ரீதருக்கும், ராஜேஸ்வரிக்கும் மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டதில் ஸ்ரீதர் ராஜேஸ்வரியை அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையிலிருந்த ராஜேஸ்வரி ஸ்ரீதரின் தாயாரிடம் சென்று முறையிட்டுவிட்டு அங்கேயே படுத்து தூங்கியதாக தெரிகிறது.
காலையில் எழுந்துப் பார்த்த போது ராஜேஸ்வரி வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரின் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடி பின்னர் ராஜேஸ்வரியின் பெற்றோரிடம் விசாரித்துள்ளனர். ராஜேஸ்வரியின் பெற்றோர் எங்களுடைய மகள் இங்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஸ்ரீதரின் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடும்போது ரங்கம் பேட்டை அடுத்த போக்கலூர் பகுதியில் கணபதி என்பவருடைய விவசாய நிலத்தில் சடலமாக இருப்பது தெரியவந்தது.
மூன்றே மாதத்தில் முடிந்த காதல் திருமணம்:வேலூரில் நடந்தது என்ன தகவல் அறிந்த வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பேரணாம்பட்டு காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றிலிருந்து ராஜேஸ்வரி உடலை மீட்கும் போது ராஜேஸ்வரி கை அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ராஜேஸ்வரியின் தந்தை ராஜா மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீதரின் குடும்பத்தாரிடம் குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மற்றும் குடியாத்தம் ஆர்டிஓ வெங்கட்ராமன் இருவரின் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:மிட் நைட்டில் பிரியாணி சாப்பிட சென்ற இளைஞர் உயிரிழப்பு!