வேலூர்: பெரிய போடிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (60) இவரது மனைவி வசந்தா (54). இவர்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான சூளைமேடு பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்களது வீட்டின் பின்புறத்தில் கொட்டகை அமைத்து ஆடு, மாடு மேய்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 31) அதிகாலை 5 மணியளவில் கொட்டகையில் அடைத்து வைத்திருந்த ஆடுகள் சத்தமிடுவதை கேட்டு வசந்தா வெளியே வந்து பார்த்தபோது அங்கு ஒரு ஆட்டை யானை மிதித்துக் கொன்றதைக் கண்டுள்ளார்.தொடர்ந்து வசந்தா அந்த யானையை விரட்ட முயன்றுள்ளார். அதேசமயம், பாலகிருஷ்ணன் வீட்டிலிருந்து வெளியே வருவதற்குள் யானை வசந்தாவைத் தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்தது. இதனைப் பார்த்த பாலகிருஷ்ணன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் யானையை விரட்டினார்.
இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த மருத்துவ குழுவினர் வசந்தாவைப் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த மேல்பாடி போலீசார், ஆற்காடு சரக வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும், வனத்துறையினர் 15 பேர் கொண்ட குழுவினர் யானையைக் கண்காணித்து வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டு, போராடிப் பிடித்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஆந்திர மாநில வனப்பகுதியில் யானைக் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை காட்டு யானை சித்தூர் மாவட்டம் குடிபாலா மண்டலத்துக்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் சுற்றித்திரிந்ததுடன் அங்குள்ள பயிர்களை நாசம் செய்தது. புதன்கிழமை (ஆகஸ்ட் 30) அதிகாலை அப்பகுதியில் கார்த்தி என்கிற இளைஞரைத் தாக்கியதுடன், அங்கு வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த வெங்கடேஷ், செல்வி என்ற தம்பதியையும் மிதித்துக் கொன்றது.