தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 28, 2021, 10:25 AM IST

Updated : Sep 28, 2021, 11:58 AM IST

ETV Bharat / state

பிரதமர் குறிப்பிட்ட நாகநதி புனரமைப்பு திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

பிரதமர் மோடி 'மன் கி பாத்' உரையில் குறிப்பிட்ட, நாகநதி புனரமைப்பு திட்டம் தற்போது 8 மாவட்டங்களுக்கு விரிவாக்கம் பெற்றுள்ளதாக அத்திட்டத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

nagandhi-rejuvenation-project
பிரதமர் குறிப்பிட்ட 'நாகநதி புணரமைப்பு திட்டம்'; தற்போதைய நிலை என்ன?

வேலூர்:வேலூர் மாவட்டம் நாகநதி நீர் செறிவூட்டும் திட்டத்தினால் நிலத்தடி நீர் மட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து பிரதமர் மோடி நேற்று(செப் .26) தனது மன் கி பாத் உரையில் குறிப்பிட்டு பேசினார். அதில், தமிழ்நாட்டில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் எடுத்துக்காட்டுகளை நான் அளிக்கிறேன். இங்கே இருக்கும் நதியான 'நாகநதி' ஆறு ஆண்டுகளுக்கு முன்பே வறண்டுபோனது.

இதன் காரணமாக இந்த நிலப்பரப்பில் நீர்மட்டம் மிகவும் குறைந்துவிட்டது. ஆனால், இங்கே இருக்கும் பெண்கள் இந்தச் சவாலை சிரமேற்கொண்டு தங்களுடைய இந்த நதியை மீண்டும் உயிர்பித்தார்கள். மக்கள் பங்களிப்பு வாயிலாக கால்வாய்களை தோண்டினார்கள், தடுப்பணைகளை உருவாக்கினார்கள். மறுசெறிவுக் குளங்களை வெட்டினார்கள். இந்த நிதி இன்று நீர் நிரம்பி இருக்கிறது என்றார்.

நாகநதி திட்டம்

நிலத்தடி நீரை செறிவூட்டும் இத்திட்டம் வேலூர் மாவட்டத்தில் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு சலமநத்தம் உள்ளிட்ட கிராமங்களின் வழியாக ஓடும் நாகநதி துணை காணற்றில் கடந்த 2016-17ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கானாற்றில் 349 நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கவும், அதையொட்டி 128 சிறிய தடுப்பணைகள் கட்டவும் ரூ. 3.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

நூறுநாள் பணியாளர்களைக் கொண்டு நடைபெற்ற புனரமைப்பு பணிகள்

15 அடி நீளம், 6 அடி அகலம், 20 அடி ஆழம் கொண்ட ஒவ்வொரு நீர் செறிவூட்டும் கிணறு அமைக்கவும், 10 பெண்கள் கொண்ட மகளிர் குழு அமைக்கப்பட்டது. இக்கிணற்றினுள் அமைக்கப்படும் சிமெண்ட் உறைகளில் தேங்கும் தண்ணீர் நிலத்தடி நீர் மட்டத்தை வேகமாக உயர்த்துகிறது.

ஒவ்வொரு கிலோ மீட்டர் தொலைவுக்கும் அமைக்கப்பட்ட தடுப்பணைகள், கிணறுகளால் மழைக்காலங்களில் பெறப்பட்ட தண்ணீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் 4 அடி முதல் 7 அடி வரை உயர்ந்தது. மேலும், ஒவ்வொரு கிணற்றின் மூலமாக ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் நிலத்தடியில் செறிவூட்ட முடியும் என்று கூறப்படுகிறது.

செறிவூட்டும் கிணறுகள்

அன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் தற்போதுவரை சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இத்திட்டம் குறித்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி மன் கி பாத் உரையில் பாராட்டி பேசிய பிரதமர் மோடி நேற்று(செப். 26) தனது காணொலி உரையில் மீண்டும் நினைவு கூர்ந்தார்.

மற்ற மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த திட்டம்

இதன் தற்போதைய நிலை குறித்து வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த நாகநிதி புனரமைப்பு திட்டத்தின் இயக்குநர் முனைவர் சந்திரசேகர் குப்பன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசுகையில், "தற்போது நிலத்தடி நீர் நன்றாக உயர்ந்துள்ளது. நன்னீர் ஓடைகள் செல்ல ஆரம்பித்துவிட்டன. தற்போது, பாலம்பாக்கம் போன்ற கிராமங்களில் நான்கு அடியிலேயே நிலத்தடி நீர் கிடைக்கின்றன. முப்போகம், பயிரிடும் அளவிற்கு நிலத்தடி நீர் அதிகரித்துவிட்டதால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

செறிவூட்டும் கிணறுகள்

இந்த நாகநதி புனரமைப்புத் திட்டம் வெற்றி பெற்றதையடுத்து இதே மாடல் திட்டத்தினை தற்போது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல், சிவகங்கை போன்ற எட்டு மாவட்டங்களில் செயல்படுத்திவருகிறோம். மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்த ஆயத்தமாகி வருகிறோம்" என்றார்.

மேலும், நாகநதி புனரமைப்புத் திட்டத்தினை இதோடு கைவிட்டு விடாமல் அது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர், "நிலத்தடி நீரின் அளவினை கணக்கிடுதல், பசுமை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது போன்று ஒரு முழுமையான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவருகின்றோம். திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் இத்திட்டத்தை செயல்படுத்தியதன் விளைவாக பாலாறு, மலட்டாறு, கௌண்டின் மகாநதி போன்ற ஆறுகளில் நன்னீர் வரத் தொடங்கியுள்ளது" என்றார்.

நாகநிதி புனரமைப்பு திட்டத்தின் இயக்குநர் முனைவர் சந்திரசேகர்

நாகநதி தினம்

2014ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி நாகநதி புனரைப்பு திட்டத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது. அன்றைய தினத்தை நாகநதி தினமாக கொண்டாட வாழும் கலை அமைப்பினர் முடிவுசெய்துள்ளனர்.

புனரமைப்பு பூஜை

பிரதமர் மோடி நேற்று முன்தினம் 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் நதிகளை கொண்டாடுவோம் என கூறியதற்கு முன்பே நாகநதி நாளை இக்குழுவினர் கொண்டாடத் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஒரு வேட்புமனு கூட தாக்கல் செய்யாத அம்மூண்டி ஊராட்சி; தேர்தலையும் புறக்கணிப்பு

Last Updated : Sep 28, 2021, 11:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details