தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று இரண்டாவது நாளாகப் பரப்புரை பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, நேற்றுகாலை வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பரப்புரை செய்தார். தொடர்ந்து, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
இதையடுத்து, நேற்றுஇரவு வேலூர் காட்பாடியில் அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்துப் பேசினார்.
அதனைத்தொடர்ந்து, இறுதியாக வேலூர் மண்டித்தெருவில் வேலூர் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி திறந்தவெளி வேனில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மேலும் பல திட்டங்களை நிறைவேற்ற மத்தியில் ஒரு நிலையான ஆட்சி வேண்டும். அதற்கு நீங்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும்.
முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோதுதான் வேலூர் மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்தினார்.
காவிரி பிரச்னையை தீர்க்க திமுக கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஜெயலலிதாவோ உச்ச நீதிமன்றத்தில் போராடி நல்ல தீர்ப்பு பெற்றிருந்தார்.
இங்குப் பாலாறு பிரச்னை நீண்ட நாட்களாக உள்ளது. இந்த மாவட்டத்தைச் சேர்ந்த துரைமுருகன் 14 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார். ஆனால் அவர் இதுவரை பாலாற்றில் ஒரு தடுப்பணையாவது கட்டி தந்துள்ளாரா?
அதிமுக அரசோ ஒரு சொட்டு தண்ணீர்கூட வீணாகக் கூடாது என்பதற்காக ஓடைகளிலும், நதிகளிலும் தடுப்பணை கட்ட ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுவரை 2500 ஏரிகள் தூர் வாரப்பட்டுள்ளது.
திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வெத்துக் கூட்டணி, அது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி வைகோ எந்த அளவுக்கு மு.க.ஸ்டாலின் வசை பாடினார் என்பதுநன்றாகத்தெரியும். ஆனால் தற்போது ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்று வைகோ கூறுகிறார்.
அப்போது ஒரு வார்த்தை இப்போது ஒரு வார்த்தை இதுபோன்றுபச்சோந்தியாகப்பேசும்தலைவர்களைக்கொண்ட கூட்டணிதான் திமுக கூட்டணி.
அடுத்த ஆண்டு ஐந்து லட்சம் வீடுகள் கட்டப்பட உள்ளது. எனவே தமிழ்நாட்டில் மொத்தம் 16 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான திட்டத்தைத் தீட்டியுள்ளோம்.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக 500 கோடி நிதி ஒதுக்கி ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வேலூர் மாநகரத்தை மிகப்பெரிய நகரமாக உருவாக்க உள்ளோம். எனவே நீங்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்" என பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.