வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சுமார் 1500 மாணவிகள் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து படித்து வருகின்றனர்.
தற்போது உள்ள பள்ளி கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளதால், அதனை இடித்து புதிய கட்டடம் கட்ட ரூ.5 கோடி நிதி ஓதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன் முதற்கட்ட பணியாக 26 வகுப்பறைகள், இரண்டு அறிவியல் ஆய்வுக்கூடங்கள் கட்டுவதற்கான பூமிபூஜை இன்று (ஆக.22) நடைபெற்றது.
இதில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்திப்பின் போது அமைச்சர் கே.சி.வீரமணியிடம் அண்மைக் காலமாக தமிழ்நட்டில் நடத்தப்பட்டு வரும் கரோனா ஆய்வுக்கூட்டத்திற்கு தி.மு.க மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுவதாக எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் குற்றஞ்சாட்டியுள்ளது குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர், ‘வேலூரில் கடந்த ஆக.20ஆம் தேதி நடைபெற்ற கரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் தொடர்பான முதலமைச்சரின் ஆய்வானது அரசு சார்ந்த மற்றும் தனிப்பட்ட ஆலோசனைக் கூட்டமாகும்.
இது மக்கள் நலனுக்காக நடத்தப்பட்டது. அதில் அதிமுக நிர்வாகிகளாகிய எங்களுக்கும் அழைப்பு வரவில்லை.
‘முதலமைச்சரின் தனிப்பட்ட ஆய்வு கூட்டத்தில் எங்களுக்கே அழைப்பு இல்லை’ தி.மு.க எங்கள் மீது எதாவது குறை கூற வேண்டுமென இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இதே திமுக ஆட்சியாக இருந்திருந்தால் அவர்களின் அராஜகத்திற்கு அளவே இருந்திருக்காது’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனாவிலிருந்து 3,07,677 பேர் குணமடைந்துள்ளனர்- சுகாதாரத் துறை