வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த பொன்னை பஜார் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (50). அதே பகுதியில் இவரது தந்தையின் பெயரிலுள்ள பூர்வீக வீட்டை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய பொன்னை கிராம நிர்வாக அலுவலர் கவிதாவிடம் (32) மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், பட்டா மாறுதல் செய்ய கிராம நிர்வாக அலுவலர் கவிதா 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், வெங்கடேசன் வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை வெங்கடேசனிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதனையடுத்து வெங்கடேசன் இன்று (ஜூன். 03) ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் கவிதாவிடம் கொடுத்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கவிதாவை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் கைதான கிராம நிர்வாக அலுவலர் கவிதாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்குப் பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தி 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் அவரை வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைத்தனர்.