வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் இன்று வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
"டாக் ஆஃப் தி டவுன் வேலூர் தான் என்கிறார்கள். ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படும் வேலூரில், ஆட்சியிலே இல்லாவிட்டாலும் பணம் மட்டும் மூட்டை மூட்டையாக ஒரு வீட்டில் இருந்தது. அது யாருன்னு உங்களுக்கே தெரியும்.
எங்கள் மடியில் கனம் இல்லை, அதனால் பயம் இல்லை என்று ஸ்டாலின் சொல்கிறார். அதை கேப்டன் சொன்னால் பொருந்தும். உங்கள் உடல் முழுவதும் கனமாக இருந்தால் அது பயமாகத்தான் இருக்கும். ஏ.சி.சண்முகம் ஒரு சிறந்த வேட்பாளர். அவர் மாணவர்களுடன் அதிகம் தொடர்புடையவர். நிச்சயமாக நல்லது செய்வார். ஆறு சட்டமன்ற தொகுதியிலும் இலவச மண்டபம் கட்டித்தருவதாக கூறியுள்ளார்.
மோடி ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வந்துள்ளார். ஸ்டாலின் எதை எடுத்தாலும் எதிர்க்கிறார். அதனால்தான் அவர் ஒரு புகார் பெட்டி என்று பிரமலதா கூறினார். என்னிடம் கூட சிலர், ஸ்டாலினை பற்றி சொன்னதும் என்ன தோன்றுகிறது என கேட்டார்கள். அவர் ஒரு உளறும் புகார் பெட்டி என்றேன். எது எடுத்தாலும் ஒருவர் எதிர்த்தால் அவன் முட்டாள் என்று அர்த்தம். எதை எதிர்க்கணுமோ அதை மட்டும்தான் எதிர்க்கணும். மத்தியிலும், மாநிலத்திலும் நம் ஆட்சி இருந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். கூட்டணி வைத்தால் நமக்கு அமோக வெற்றி கிடைக்கும் என விஜயகாந்த் கூறினார்" என்றார்.