வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகம் உள்ளது. இங்கு மகளிர் திட்டம் அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஊராட்சிகள் உதவி இயக்குநராக பணிபுரிபவர் செந்தில்வேல் (50). இவர் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஊராட்சி செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறைகேடாக பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று (நவ. 6) மாலை செந்தில்வேலின் அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சென்ற போது, அவர் தனது பணிகளை முடித்து விட்டு காரில் வீட்டுக்கு செல்ல ஆயத்தமானார்.
இதைப் பார்த்த லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள், செந்தில்வேலை வழிமறித்து அவரது அலுவலகத்தில் சோதனை செய்ய வந்துள்ளதாக தெரிவித்தனர். பின்னர் அங்கு நடத்திய சோதனையில் ரூ. 92 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: ரயில்வே வணிக மேம்பாட்டு பிரிவுகளுடன் பொது மேலாளர் கலந்தாய்வு!