தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நிழலில் வேலை செய்ய ஆசைப்படுகிறோம்' - வேட்டைகார சமூக மக்கள் வேதனை - வேலூர்

பழங்குடியினர் பட்டியலில் இருந்த வேட்டைக்கார சமூக மக்களை எம்பிசி பிரிவுக்கு மாற்றியதால் அவர்களுக்கான இடஒதுக்கீடு கிடைக்காமல் படித்தும் பலர் செங்கல் சூளைகளில் வேலை செய்ய வேண்டிய நிலையும் உள்ளது. இதுகுறித்து வேட்டைக்கார சமூக மக்கள் கூறியவற்றை இந்த தொகுப்பில் காணலாம்.

vettaikara community people delisted from the Scheduled Tribes so they struggling to get their reservation
’நிழலில் வேலை செய்ய ஆசைப்படுகிறோம்’ வேட்டைகார சமூக மக்கள் வேதனை

By

Published : Mar 1, 2023, 4:12 PM IST

'நிழலில் வேலை செய்ய ஆசைப்படுகிறோம்' - வேட்டைகார சமூக மக்கள் வேதனை

வேலூர்:கணியம்பாடி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் வேலை செய்து வரும் வேட்டைக்காரன் சமூகத்தை சேர்ந்த மக்கள், பழங்குடியினர் பட்டியலில் இருந்து வேட்டைக்கார சமூகம் எம்பிசி பிரிவில் இணைக்கப்பட்ட பிறகு, தங்களுக்கான அரசு சலுகைகள் முறையாக கிடைக்கவில்லை எனவும்; இதனால் தங்கள் வாழ்க்கை பின்தங்கியே இருப்பதாக வேதனைத் தெரிவிக்கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஆற்காடு தொகுதியில் மட்டும் வேட்டைக்கார சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 11 ஆயிரம் பேர் உள்ளனர். தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானர் உள்ளனர். கடந்த 1954 முதல் 1974ஆம் ஆண்டு வரைக்கும் வேட்டைக்கார சமூகம் பழங்குடியினர் பட்டியலில் இருந்து வந்தது. அதற்குப் பிறகு MBC-க்கு மாற்றப்பட்டுள்ளது.

1954 முதல் 1974 வரைக்கும் வேட்டைக்கார சமூகம் பழங்குடியினர் பட்டியலில் இருந்துள்ளது

இதனை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்கக்கோரி, பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து பல்வேறு கட்டப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அண்டை மாநிலமான புதுச்சேரியில் வேட்டைக்கார சமூகம் பழங்குடியினர் பட்டியலில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் இல்லை.

1954 முதல் 1974 வரைக்கும் வேட்டைக்கார சமூகம் பழங்குடியினர் பட்டியலில் இருந்துள்ளது

எம்பிசி பிரிவில் இணைக்கப்பட்டதால் இட ஒதுக்கீடு குறைந்து தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், மேல்படிப்பு படிக்கவும்; அரசு வேலைக்கு செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் கூடை நெய்வது, செங்கல் சூளையில் வேலை பார்ப்பது, ஈசல் பிடிப்பது, மீன்பிடிப்பது போன்ற தொழிலையே இன்னும் செய்து வருகிறார்கள்.

குருவிக்காரர், நரிக்குறவர், வேட்டைக்காரன், லம்பாடி, படுகர் உள்ளிட்ட சாதியினரை பழங்குடியினர் பிரிவில் இணைப்பதாக நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் 280ஆவது வாக்குறுதியாக திமுக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்கக்கோரி கடந்த ஏழாம் தேதி (07.02.2023) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அரசு அதிகாரிகள் 10 நாட்களில் இதற்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர், ஆனால் இன்னமும் தீர்வு எட்டப்படவில்லை.

இதுகுறித்து வேட்டைக்காரன் சமூக மக்களான சீனிவாசன் கூறுகையில், ''பழங்குடியினர் பட்டியலில் இணைக்க கோரி கடந்த 20ஆண்டுகளாக சங்கம் நடத்தி வருகிறோம். பலமுறை கோரிக்கை வைத்து தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். பாண்டிச்சேரியில் 2016இல் வேட்டைக்காரன் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளார்கள், தமிழக அரசும் அதே போல் பழங்குடியினர் பட்டியலில் எங்களை சேர்க்க வேண்டும்.

1956-ல் பழங்குடியினர் பட்டியலில் தான் இருந்தோம், அதனையும் ஆவணமாக அரசுக்கு கொடுத்துள்ளோம். 280வது தேர்தல் அறிக்கையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார். அதனை அவர் நிறைவேற்ற வேண்டும். கடந்த ஆண்டு ஜூன் மாதம் எங்களைக் குறித்து ஆராய்ச்சியும் மேற்கொண்டார்கள். ஆனால் இன்னமும் தீர்வு எட்டவில்லை'' என்றார்.

கல்லூரி பயிலும் மாணவி அஸ்வினி கூறுகையில், ''முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை, பழங்குடியினர் சான்றிதழ் இருந்தால் தான் எங்களுக்கு அரசு கல்லூரிகளிலும், அரசு பணிகளிலும் வாய்ப்பு கிடைக்கும். படிக்கணும் என்ற ஒரே எண்ணத்தில் அதிகாலை நாலு மணி முதல் செங்கல் சூளையில் வேலை செய்து தான் படித்து வருகிறோம்.

எங்கள் பெற்றோர் படிக்காத சூழலிலும், எங்களை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார்கள். எங்களில் சிலர் படித்தும் வேலையில்லாமல் இருக்கிறோம். நாங்கள் அடுத்த கட்டமாக வேலைக்குப் போனால் தான் எங்களால் கொஞ்சமாவது முன்னேற முடியும். படிப்பு மட்டும் தான் எங்களைக் காப்பாற்றும். எம்பிசி-யில் இட ஒதுக்கீடு குறைவு என்பதால் எங்களால் அரசு கல்லூரியில் சேர, அரசு பணிகளுக்கு செல்ல முடியவில்லை. வெயிலில் காய்ந்து உழைத்து வரும் எங்களுக்கு நிழலில் வேலை செய்ய ஆசைப்படுகிறோம். எவ்வளவு காலத்திற்கு எங்களால் இப்படியே இருக்க முடியும்'' என கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து ரேணுகா கூறுகையில், ''எங்கள் முன்னோர் காட்டில் முயல் பிடிப்பார்கள், கூடைத் தொழில் செய்வார்கள். அதையே தான் நாங்களும் செய்து வந்தோம். எங்களைப் படிக்க வைக்கவில்லை, ஆனால் தற்போது எங்கள் பிள்ளைகளை நாங்கள் கஷ்டப்பட்டு படிக்க வைத்து வருகிறோம். எங்கள் பிள்ளைகளையாவது வெளி உலகத்தை பார்க்க வேண்டும் என்ற கனவோடு படிக்க வைத்து வருகிறோம். ஆனால், படித்து முடித்த பிறகும் எங்களோடு செங்கல் சூளை வேலையை செய்து வருகிறார்கள். இதைப் பார்க்கும் போது வேதனையாக உள்ளது. மீண்டும் மீண்டும் இதே கஷ்டத்தை அனுபவித்தால் நாங்கள் எப்படி முன்னேற முடியும்'' எனக் கூறினார்.

இப்பகுதியில் உள்ள வேட்டைக்காரன் சமூக ஆட்களில் முதல் முறையாக காவலர் தேர்வுக்கு தொடர்ந்து முயற்சித்து வரும் சுரேஷ் என்ற இளைஞர் கூறுகையில், ''நான் கடந்த நான்கு முறை காவலர் தேர்வுக்கு முயற்சித்து வருகிறேன், இந்த சமூகத்தில் இருந்து முதல் முறையாக காவலர் தேர்வுக்கு முயற்சித்து வருகிறேன். பழங்குடியினர் பிரிவில் எங்களை சேர்க்க வேண்டும்.

இட ஒதுக்கீடு என்பது எங்களுக்கு அவசியமான ஒன்று. எம்பிசி பிரிவில் எங்களுக்கான இட ஒதுக்கீடு குறைவு என்பதால் அங்கு போட்டி அதிகமாக உள்ளது. எங்களை மீண்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது மூலம் எங்கள் வாழ்க்கை மாறும் என நம்புகிறோம். எம்பிசி பிரிவில் எங்களுக்கு வயது வரம்பும் குறிப்பிட்ட அளவுக்கு இல்லை'' எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு ஜாக்-பாட்.. மூன்று புதிய திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்..

ABOUT THE AUTHOR

...view details