வேலூர் மாவட்டத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 18 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “வேலூர் மாவட்டத்தில் முறையாக படிக்காமல் போலி மருத்துவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதாக ரகசிய தகவல் கிடைத்ததன்பேரில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டோம். கடைசியாக அரக்கோணத்தில் போலி மருத்துவர் ஒருவர், டெங்கு பாதித்த சிறுவனுக்கு தவறான ஊசி செலுத்தியதால் சிறுவன் பலியானான். எனவே இதைத் தடுக்க 35 குழுக்கள் ஏற்படுத்தி மொத்தம் 170 பேர் சோதனை மேற்கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த சோதனை நடைபெற்றது. நாங்கள் 47 பேரை இலக்கு வைத்து சோதனை செய்தோம். இதில் 17 பேரை கைது செய்துள்ளோம். நாங்கள் வரும் தகவலை அறிந்த 29 பேர் தப்பி ஓடியுள்ளனர். அவர்களை திரும்பவும் கைது செய்வோம். கைது செய்யப்பட்ட 17 பேர் மீது பொதுமக்கள் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வணிகம் மேற்கொள்வது என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.