வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டையில் கடந்த 18ஆம் தேதி இளம்பெண் ஒருவர் மூன்று நபர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வுசெய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது தனது காதலனுடன் வந்த இளம்பெண் கோட்டை பூங்காவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த நபர்கள் கத்திமுனையில் காதலனை மிரட்டி இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தனர்.
இது குறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த அடா மணி, வசந்தபுரம் சக்திவேல், அஜித் உள்பட இவர்களுக்கு உதவியாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் கொய்யா மாரி ஆகிய நான்கு பேரை கைதுசெய்தனர்.
இதில், அஜித் 18 வயது பூர்த்தியடையாததால் அவரை மட்டும் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துவிட்டு மீதியுள்ள மூன்று பேரையும் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட மூன்று பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யும்படி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.