வேலூர்: காட்பாடி பகுதியில் உலக புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகமான விஐடி பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கக்கூடிய இந்த பல்கலைக்கழகத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சுமார் 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், இன்று (டிச.14) மாலை இந்த பல்கலைக்கழகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகத் தெரிகிறது.
இந்த வெடிகுண்டு மிரட்டலானது, போலீசாரின் 100-கட்டுப்பாட்டு எண்ணிற்குத் தொடர்பு கொண்டும், விஐடி பல்கலைக்கழகத்தின் இ-மெயிலுக்கு தனிப்பட்ட முறையிலும், மர்ம நபர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகத்தினர் வேலூர் மாவட்ட காவல்துறைக்குப் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில், வேலூர் மாவட்ட எஸ்.பி மணிவண்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார், விஐடி பல்கலைக்கழகத்திற்கு விரைந்து சென்று பல்கலைக்கழகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.