வேலூர்:வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 70க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இதில் சுமார் இரண்டரை லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த 2019ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் மூன்று முதல் நான்கு மடங்கு வரை உயர்த்தப்பட்டது. அதேநேரம், மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம், அகவிலைப்படி மற்றும் பயணப்படி உள்ளிட்டவை உயர்த்தப்படாமல் இருந்தது.
இளநிலைப் பாடப் பிரிவுகளில் ஒரு தாளுக்கு ரூ.12, முதுநிலை பாடப் பிரிவுகளில் ஒரு தாளுக்கு ரூ.15 வீதம் மதிப்பூதியம் வழங்கப்பட்டது. இதனை உயர்த்தி இளநிலைப் படிப்பில் ஒரு தாளுக்கு ரூ.16க்கு அதிகமாகவும், முதுநிலை பாடப் பிரிவில் ஒரு தாளுக்கு ரூ.20க்கு அதிகமாகவும் வழங்க வேண்டும் என திருவள்ளுவர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழு செயலாளர் ஆண்டனி பாஸ்கரன் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி தளத்தில் கடந்த 15ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்தியில், மதிப்பூதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் விரைவில் தொடங்க இருக்கும் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்க இருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி அனைத்து தன்னாட்சி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக அனைத்து துறைகளுக்கும் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) விஜய பாஸ்கரன் நேற்று முன்தினம் (ஜூன்16) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.