வேலூர்: ஓட்டேரியில் ஆதி திராவிடர் நலத் துறையின் சார்பாக நடத்தப்பட்டுவரும் அரசு கல்லூரி மாணவர்களுக்கான தங்கும் விடுதி செயல்பட்டுவருகிறது. இங்கு வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் தங்கியுள்ளனர்.
இந்த விடுதியில் கடந்த 10 ஆண்டுகளாக காப்பாளராக சண்முகம் என்பவர் பணியாற்றிவந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 15) ஆதி திராவிடர் நலத் துறை ஆணையர் மதுமிதா திடீரென விடுதிக்கு நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார்.
உரிய நடவடிக்கைக்கு கேரண்டி!
ஆய்வின்போது விடுதியின் காப்பாளர் சண்முகம் உடல்நலம் சரியில்லை என்று வெளியே சென்றுள்ளார். ஆய்வின்போது விடுதி காப்பாளர் அங்கு இல்லாததால் சண்முகத்தைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். அவருக்குப் பதிலாக கருணாநிதி என்பவர் காப்பாளராக நியமிக்கப்பட்டார். இதனால் மாணவர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே பணியாற்றிய விடுதியின் காப்பாளர் சண்முகத்தை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆதி திராவிடர் நலத் துறை அலுவலகத்தினை முற்றுகையிட்டு அரை மணி நேரத்திற்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தகவல் அறிந்து வந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் இது தொடர்பாக ஆட்சியரிடம் மனு அளிக்கும்படி கூறிய நிலையில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் நேரில் சென்று மாணவர்கள் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
‘டீ’ உபசாரம்
இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்திலிருந்து கலைந்துசென்றனர். போராட்டத்தின்போது அலுவலகத்திலிருந்த மாணவர்களுக்கு அலுவலக ஊழியர்கள் டீ கொடுத்து உபசரித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:கல்வி உதவித்தொகை: சிறுபான்மை மாணவர்களுக்கு காலநீட்டிப்பு வழங்கக்கோரி முறையீடு