வேலூர்: குடியாத்தம் நகரப் பகுதியானது தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியாக இருப்பதால் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிகப்படியான கனரக வாகனங்கள் பொருட்களை ஏற்றிச் செல்வது வழக்கமாக உள்ளது. அதேசமயம் தினந்தோறும் காலை வேளையில் பள்ளிகளுக்குச் செல்லக்கூடிய மாணவர்கள், வேலைகளுக்கு செல்லக்கூடியவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அதிகப்படியாக இந்த சாலையையே பயன்படுத்துகின்றனர்.
இப்படியான சூழ்நிலையில் இப்பகுதியில் செல்லும் கனரக வாகனங்களால் விபத்துக்கள் அவ்வப்போது ஏற்படுவதாகவும், எனவே இதற்கு விரைவாக உரிய தீர்வு எடுக்கவேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், உத்தரவு ஒன்றினை பிறப்பித்தார். அந்த உத்தரவின் அடிப்படையில் போக்குவரத்து காவல்துறையினர், இந்த பகுதியின் வழியாக ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் கனரக வாகனங்கள் உட்பட அனைத்து கனரக வாகனங்களையும் குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியில் தடுத்து நிறுத்தினர்.