சிறுவனின் உயிரைக் காத்த பெண் ஐடி ஊழியர் - பாராட்டிய வேலூர் எஸ்.பி. வேலூர்:காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், தனது மகன் நிஷாந்த்(4) உடன் ஆர்.என்.பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் இன்று (ஜன.9) திரும்பும்போது, எதிர்பாராத விதமாக வசூர் பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் வந்த வாகனம் சரவணனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதில் தந்தை சரவணன் மகன் நிஷாந்த் ஆகியோர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதனைக்கண்ட அவ்வழியாக காரில் சென்ற சென்னையைச் சேர்ந்த பெண் ஐடி ஊழியர் கீதா என்பவர் துரிதமாக செயல்பட்டு, அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளார்.
இச்சூழலில் அவ்வழியாக வந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் விபத்தில் படுகாயமடைந்த சிறுவனையும் தந்தையையும் மீட்டு எஸ்.பி. வாகனத்திலேயே இரத்தினகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். உடன் சென்ற கீதாவும் குழந்தையை தனது கைகளில் ஏந்தியவாரு ஓடிச்சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளார். தற்போது இருவருக்கும் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு, 'விபத்தில் காயமடைந்தவர்களை துரிதமாக செயல்பட்டு மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த சென்னையைச் சேர்ந்த பெண் ஐடி ஊழியர் கீதாவை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் எஸ்.பி ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பாராட்டினர். இதேபோன்று, அனைவரும் துரிதமாக செயல்பட்டு எதிர்பாராத விபத்துக்குள்ளானவர்களை காலதாமதம் இன்றி மீட்டு மருத்துவ சிகிச்சை அளிக்க உதவ வேண்டும்' என வேலூர் சரக டிஐஜி முத்துசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: அல்சைமர் நோயின் ஆய்வின் முடிவுகளுக்கு சவால் விடும் ஆய்வுக் கூறுகள்!