வேலூர் மாவட்டம் பாலாற்றில் விதியை மீறி தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது. மணல் அள்ள அரசு தடைவிதித்தும்கூட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மணல் கடத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அரக்கோணம் அருகே ஆற்றில் மணல் திருடியபோது மணல் சரிந்து விழுந்ததில் நேற்றிரவு வாலிபர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் மணல் கொள்ளை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் விதி மீறி மணல் திருடிய விவகாரத்தில் ஒருவர் பலியான சம்பவம் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை உயர் அலுவலர்கள் வேலூர் மாவட்ட காவல்துறையிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆற்றில் விதிமீறி மணல் அள்ளப்படுவதை தடுக்க சிறப்பு குழு அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வேலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையை முற்றிலுமாக தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 10 ஆயுதப்படை காவலர்கள் அடங்கிய சிறப்புப் படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது சம்பந்தமாக ஏற்கனவே ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் 10 ஆயுதப்படை காவலர்கள் அடங்கிய தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது" தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் இந்த அறிவிப்பு சமூக ஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தாலும்கூட முழுமையான அளவில் இந்த குழு செயல்பட்டு ஆற்றில் மணல் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதே இம்மாவட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் முதல் அலுவலர்கள் வரை மேலிட சம்பந்தம் இருப்பதால் மணல் கடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.