தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலூரில் மரண பள்ளங்களாக காட்சி அளிக்கும் சாலைகள் - vellore-road and drainage damage issue

வேலூர்: அலுவலர்களின் அலட்சியம் காரணமாக பாதாளச் சாக்கடை திட்ட பணிகளால் சாலைகள் பள்ளங்களாக காட்சியளிக்கின்றன. இது வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

vellore-road and drainage damage issue

By

Published : Nov 9, 2019, 7:38 AM IST

பாதாளச் சாக்கடை திட்ட பணிகள்

வேலூர் மாவட்டம் மத்திய அரசின் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குறிப்பாக சுமார் ரூ.530 கோடி மதிப்பில் பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவருகிறது. வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பல ஆண்டுகளாகியும் பாதாளச் சாக்கடை திட்ட பணிகள் நடைமுறைக்கு வராததால் மாநகரின் முக்கியப் பகுதியில்கூட மழை பெய்யும் நேரங்களில் வீடுகளில் கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுவருகிறது.

இந்தச் சூழ்நிலையில் தற்போது செயல்படுத்தப்பட்டுவரும் பாதாளச் சாக்கடை திட்ட பணிகளுக்காக மாநகரின் பல்வேறு தெருக்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளங்கள் தோண்டி குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இது போன்று திட்டங்களுக்காக சாலையில் பள்ளம் தோண்டும்போது மாநகராட்சியே முறைப்படி இந்தப் பள்ளங்களை மூடி சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும். ஆனால் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் சாலைகள் சீரமைக்கப்படவில்லை.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள்

இதனால் பெரும்பாலான தெருக்களில் சாலை முழுவதும் மேடு பள்ளங்களாக காட்சியளிக்கின்றன இதற்கிடையில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளுக்காக சாலைகளில் பள்ளம் தோண்டி குழாய்கள் பதிக்கும் பணிகளை குடிநீர் வாரியம் மேற்கொண்டுவருகிறது. ஒரே நேரத்தில் இரண்டு திட்ட பணிகளுக்காகச் சாலைகள் தோண்டப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

குறிப்பாக மழை நேரங்களில் வேலூர் மாநகரின் அனைத்து தெருக்களிலும் மேடு பள்ளமான சாலைகளில் தண்ணீர் தேங்கி சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது ஆங்காங்கே பள்ளங்கள் இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர், சிலர் நிலை தடுமாறி கீழே விழும் அபாயமும் ஏற்படுகிறது.

பள்ளங்களாக காட்சி அளிக்கும் சாலைகள்

அலட்சியமாகச் செயல்படும் அலுவலர்கள்

அதேபோல் பள்ளங்கள் மூடப்படாததால் ஆங்காங்கே கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையோரம் தேங்கி நிற்கிறது. ஏற்கனவே வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவிவரும் சூழ்நிலையில் இதுபோன்ற திட்டப் பணிகளில் அலுவலர்கள் அலட்சியமாகச் செயல்படும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ''எங்களுக்குத் தரமான சாலை அமைக்காவிட்டாலும் இருக்கின்ற சாலையை பழையபடியே பராமரித்து கொடுக்க வேண்டும். வாகனத்தில் செல்ல முடியாவிட்டாலும்கூட நடந்துசெல்லும் வகையிலாவது பள்ளங்களை மூடி சீரமைத்துக் கொடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு குட் பை சொல்லும் 'அம்மா குடிநீர்’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details