வேலூர் மாவட்டம் சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுரங்கம் (90). இவரது மனைவி வள்ளியம்மாள் (78). இந்தப் பகுதி முழுவதும் மண்பாண்டம் தொழில் செய்யும் தொழில் நிறைந்த பகுதி ஆகும். இங்குள்ளவர்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட பாரம்பரியமிக்க பகுதியில் பிறந்த பொன்னுரங்கம் தந்தையிடமிருந்து மண்பாண்டம் தொழிலைக் கற்றுக் கொண்டார்.
அன்றிலிருந்து இந்த தொழிலை நேசிக்க ஆரம்பித்த பொன்னுரங்கம், வாழ்க்கையில் தான் சந்திக்க இருக்கும் சவால்கள் எண்ணிப் பார்க்காமல் சக மனிதர்களை போல் தனது வாழ்க்கையை தொடங்கியுள்ளார். தனக்கு துணையாக வள்ளியம்மாளை மணமுடித்த பொன்னுரங்கம் தனது தொழிலுக்கும் தன் மனைவியை துணையாக வைத்துக் கொண்டார். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இந்த தொழிலில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த தம்பதிக்கு ரூபாவதி (57), வாசுகி (51), பாண்டு (53), ஹேமாவதி (48), ஞானசேகரன் (45), துர்காதேவி (41) என 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். நாளடைவில் மண்பாண்டம் தொழில் நலிவடைந்த போதிலும் கடும் வறுமையிலும் தனது ஆறு குழந்தைகளை தம்பதியினர் வளர்த்து ஆளாக்கியுள்ளனர். ஒரு பக்கம் வறுமை வாட்டிய நிலையில் மறுபக்கம் தனது இரண்டாவது மகள் வாசுகி கண் பார்வையை இழந்து நின்றதைப் பார்த்து தம்பதி கண்கலங்கினர்.
மகளுக்கு எப்படியாவது பார்வை கிடைக்க வேண்டும் என்பதற்காக இருவரும் ஒவ்வொரு மருத்துவமனையாக அலைந்து பார்த்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில் பார்வை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை வாழ்நாள் முழுவதும் உனக்கு நாங்களே துணையாக இருக்கிறோம் என்று கூறி தனது பார்வையற்ற மகளை பொன்னுரங்கம் - வள்ளியம்மாள் தம்பதி அரவணைத்து வளர்க்கத் தொடங்கினர்.
தற்போது வாசுகிக்கு 51 வயது ஆகிறது பார்வை இல்லை என்ற ஒரே காரணத்தால் அவருக்கு திருமணமும் நடைபெறவில்லை. இதனால், அவருக்கு அனைத்துமாய் அவரது பெற்றோர்கள் இருந்து வருகின்றனர். மனம் தளராமல் தனது மகளை பொன்னுரங்கம் இன்றுவரை கூடவே வைத்து கவனித்துக் கொள்கிறார்.
வள்ளியம்மாளும் சமையல் வேலை, வீட்டு வேலை மற்றும் கணவனுக்கு துணையாக மண்பாண்ட வேலை என அன்றாட பணிகளுக்கு இடையில் தனது பார்வையற்ற மகளை கண்ணிமை போல் பாதுகாத்து வருகிறார். மேலும் இவரது இரண்டு மகன்களும் வளர்ந்து ஆளாகி வேலைக்கு சென்றாலும் கூட பொன்னுரங்கம் இன்னும் தனது மண்பாண்டம் தொழிலை கைவிடவில்லை முடிந்தவரை சுயமாக சொந்தக்காலில் நின்று சம்பாதித்து, தான் வாழ்வது மட்டுமல்லாமல் தனது பார்வையற்ற மகளையும் வாழ வைக்க வேண்டும் என்பதற்காக இருவரும் தற்போது வரை மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் பொன்னுரங்கம் பெரிய அளவிலான மண்பானைகளை உற்பத்தி செய்து வந்துள்ளார்.