வேலூர் மாவட்டத்தில், சாலை விபத்துகளை தடுப்பதற்காக மாவட்ட காவல் துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காட்பாடி சாலையில் காவல் துணைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் இன்று திடீரென சிறப்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சாலையின் நான்கு புறமும் நின்று கொண்டிருந்த காவலர்கள் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்தனர். அதேபோல் காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்தவர்ளையும் பிடித்து அபராதம் விதித்தனர். அந்த அபராதத் தொகையை நவீன கையடக்க கருவி மூலம் வசூலித்தனர்.
இதைத் தொடர்ந்து, தலைக்கவசம் வைத்துக்கொண்டு அணியாமல் வந்த நபர்களுக்கு காவலர்கள் தலைக்கவசத்தை அணிந்து விட்டனர். ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தலைக்கவசம் அணியாமல் வந்த அனைவரையும் காவல் துறையினர் வழிமறித்து 100 ரூபாய் அபராதம் விதித்தனர்.