வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி (நாளை மறுநாள்) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகியவை போட்டியிடாமல் விலகியுள்ளது. இதனால் அதிமுக, திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மட்டும் களத்தில் இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது. அதிமுக சார்பில் கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம், திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வேலூர் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு! - இன்று மாலை 6 மணிக்கு நிறைவு
வேலூர்: மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலை ஆறு மணியுடன் நிறைவடையும் என்றும், வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கும் அரசியல் கட்சியினர் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.
திமுகவைப் பொறுத்தவரை கடந்த மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 38ஆவதாக வேலூர் தொகுதியையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது. அதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளதால் வேலூர் தொகுதியைக் கைப்பற்றி தங்கள் கட்சி சார்பில் இரண்டாவது மக்களவை உறுப்பினரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது. நாம் தமிழர் கட்சி அதிகளவில் வாக்குகள் பெற்றுள்ளதால் புது உத்வேகத்துடன் இந்த முறை தேர்தல் களத்தை சந்திக்கிறது.
மேலும், நாளை மறுநாள் காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் 48 மணி நேரத்திற்கு முன்பாக அதாவது இன்று மாலை ஆறு மணியுடன் தேர்தல் பரப்புரை ஓய்வதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். பரப்புரை முடிந்தவுடன் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள அரசியல் கட்சியினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.