வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு அனுப்பும் பணிகள் நிறைவுபெற்றன. இந்நிலையில், நாளை நடைபெறும் தேர்தலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க காவல்துறை தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தேர்தல்: பலத்த பாதுகாப்பு! - காவல் கண்காணிப்பாளர்
வேலூர்: நாளை நடைபெறும் வேலூர் மக்களவைத் தேர்தலில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க காவல்துறை தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மக்களவைத் தேர்தலுக்காக தொகுதி முழுவதும் 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 75 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 179 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாளிலிருந்து இதுவரை 2 கோடியே 26 லட்சத்து 80 ஆயிரத்து 320 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவின்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.