வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் எம்.எல்.ஏ லோகநாதன். அதிமுகவைச் சேர்ந்த இவர் மறைமுகமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டு இருந்துவருகிறது. இவருக்கு துணையாக முரளி என்பவரும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி செயலாளர் சேகர் என்பவர் மணல் கடத்தல் தொடர்பாக முரளி மீது காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் முரளி, எம்.எல்.ஏ.வின் தரப்பு என்பதால் அவர் மீது காவல் துறை தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்நிலையில், தனக்கு உடந்தையாக இருந்த முரளி மீது சேகர் புகாரளித்ததைத் தெரிந்து லோகநாதன் சேகருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.
அந்த ஆடியோவில், ’முரளி மணல் கடத்துகிறான் என அதிகாரிகளிடம் சென்று புகார் அளித்துள்ளாய். மற்ற கட்சிக்காரன் மணல் கடத்தலாம் நம் கட்சிக்காரன் கடத்தக்கூடாதா இப்படி இருந்தால் கட்சிக்காரன் எப்படி பிழைக்க முடியும்?’ என லோகநாதன் கேட்கிறார்.
அதற்கு, ’நான் முரளியை மட்டும் பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை. இரவு நேரங்களில் மணல் கடத்தி செல்லும் வாகனங்களால் தூக்கம் வரவில்லை என்று மக்கள் என்னிடம் வந்து சொன்னார்கள் அதை வைத்துதான் அலுவலர்களிடம் புகார் செய்தேன் என்று கூறும் சேகர், எம்.எல் ஏவே ஆட்களை வைத்து மணலை கடத்துகிறார் என டீக்கடைகளில் பேசுகிறார்கள்’ என்கிறார்.
இதனால் ஆத்திரமடையும் ’எம்.எல்.ஏ, எந்த டீக்கடைல சொல்றான் பேர சொல்லுடா’ என ஆபாச வார்த்தைகளை பேசுகிறார். இருவரின் இந்த உரையாடல் வாட்ஸ் அப்பில் வைரலாகியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நெருங்கியுள்ள சூழலில் இந்த ஆடியோவால் வேலூர் மாவட்ட அதிமுக கலங்கி போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.