வேலூர்:வேலூர் மாநகராட்சியில் நீண்ட நாட்களாக குடிநீர் வசதி, சாலை வசதி, பாதாளச் சாக்கடை திட்டம், தூய்மைப் பணி நிறைவேற்றாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பொதுமக்களின் பிரச்னைகள் குறித்து வேலூர் மாநகராட்சி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று பாஜக சிறுபான்மையினர் தேசிய பொதுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம், வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ரத்தினவேலிடம் புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பல ஆண்டுகளாக மக்களின் அடிப்படை பிரச்னைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்றும், அதனை நிறைவேற்றிட மாநகர ஆணையர் ரத்தினவேலிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாக கூறினார்.
மேலும், “பாஜகவினர் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்காக போராடும் பட்சத்தில் காவல் துறையை பயன்படுத்தி, பாஜக நிர்வாகிகளை கைது செய்து வருகின்றனர். இது கண்டித்தக்க செயல். திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. அரசுக்கு வரவேண்டிய வருமானத்தை முறைகேடாக பயன்படுத்தியதால்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், அமைச்சர் பொன்முடியும் அமலாக்கதுறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். விசாரணைக்குச் செல்லும் பொன்முடி அப்படியே திகார் சிறைக்கும் செல்வார். வரும் மூன்று மாதங்களில் மேலும் பல அமைச்சர்கள் சிக்குவார்கள்.
ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகளில் பிரதமரின் 9 ஆண்டு கால சாதனை குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கச் சென்றால், அங்குள்ள சில இஸ்லாமிய அமைப்புகள் அதை தடுத்தனர். அது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க சென்றால், அங்கு வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினர் முன் வரவில்லை.