வேலூர்:வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி அதிக மலைக் கிராமங்களைக் கொண்ட தொகுதியாகும். சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான மலைக் கிராமங்களுக்குச் சாலை வசதி என்பது இன்னமும் நிறைவேறாத நிலையிலேயே உள்ளது.
இதனால் கர்ப்பிணிகள், நோய்வாய்படுபவர்களை மலைக் கிராமங்களுக்குக் கீழே உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்துக்கு டோலி கட்டி தூக்கி வரும் நிலையே தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஊசூர் அடுத்த அத்தியூர் ஊராட்சிக்குள்பட்ட வெள்ளக்கல் மலைப் பகுதியைச் சேர்ந்த உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் வனப்பகுதிக்குள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி தூக்கி வரப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
மூன்று கிலோ மீட்டர் பயணம் :வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன்-சவுந்தர்யா தம்பதி், லட்சுமணன் உயிரிழந்த நிலையில் சவுந்தர்யா(31) பிள்ளைகளோடு தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் அவரது உடல் நிலை மோசமானதால் நேற்று அப்பகுதி மக்களால் டோலி கட்டி 3 கிலோ மீட்டர் தூரம் வெள்ளக்கல்லில் இருந்து குருமலை வரை வனப்பகுதிக்குள் தூக்கி சென்றனர்.
பின்னர் குருமலையில் இருந்து வேன் மூலம் அரியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல கடந்த ஆண்டு 7-ம் மாதம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் டோலி கட்டி தூக்கி செல்லப்பட்டார்.